×

செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம்: உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அறுவடை செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் முறையாக கொள்முதல் செய்யப்படாததால், திறந்தவெளிகளில் தேங்கி கிடக்கின்றன. இதனால் அவை அனைத்தும் பாழாகிவிடுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வில்லியம்பாக்கத்தை சுற்றியுள்ள ஆத்தூர், வடகால், திம்மாவரம், சாஸ்தரம்பாக்கம், வெண்பாக்கம் கொளத்தூர், கொங்கனாஞ்சேரி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி கொள்ளுமுதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்துள்ளனர்.

எனினும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள திறந்தவெளி பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அவற்றை விளைவித்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வட்டிக்குப் பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர். இதனால் எங்களின் நெல்மூட்டைகள் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களுக்கு நெல்லுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாவிட்டால், மழைக் காலத்தின்போது இவை அனைத்தும் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமாகிவிடும். இதுதவிர, இப்பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாததால், இந்த நெல்மூட்டைகள் திருடப்படும் அபாயமும் உள்ளதால், தங்களது நெல்மூட்டைகளுடன் ஏராளமான விவசாயிகள் அச்சத்துடன் காவல் காக்கும் அவலநிலையும் நீடிக்கிறது. எனவே, வில்லியம்பாக்கத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் கவலையை போக்க மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம்: உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!